×

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண்ணை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்

‘தொங்கவிட்ட சட்டையைத் தூக்கிக் கீழே போட்டவன் யார்? யார்? யார்?’ என்று துவங்கும் பிரபலமான குழந்தைப் பாடல் ஒன்று உள்ளது. காற்று என்னவெல்லாம் செய்தது என்ற கேள்விக்கான பதிலை அது நமக்குத் தருகிறது. அடுக்கி வைத்த தாள்களை சிதறிவிடுவது, நின்று கொண்டிருக்கும் மரங்களை ஆட்டி வைப்பது இப்படி நிறைய வேலைகளைக் காற்று செய்கிறது என்று அந்தப் பாடலில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கூறியிருப்பார். கூடவே காற்று செய்யும் வேலைகளில் இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.‌காற்றடிக்கும் காலங்களில் அதிக தூசிகளை எழுப்பி கண்ணுக்குள் விழ வைப்பதும் காற்றின் வேலைதான்.

கண்களில் விழும் அயல் பொருட்களின் (foreign bodies) பட்டியலில் முதலாவது வருவது வாகனங்களில் செல்லும்போதும், தெருவில் நடக்கும் போதும் காற்றினால் வரக்கூடிய தூசிகள் தான் முதலிடத்தைப் பிடிக்கின்றன. அடுத்ததாக, பணியிடத்தில் ஏற்படும் சிறு கவனக்குறைவுகளால் கண்களுக்குள் விழும் சிறிய துகள்கள். வெல்டிங் வேலை, டைல்ஸ் வெட்டுவது, பிளம்பிங்கின் போது சுவரை உடைப்பது, அம்மி மற்றும் கிரைண்டர் தயாரிப்பின் போது துகள்கள் பறப்பது, இவற்றால் கண்ணில் ஏற்படும் தூசிகள் இரண்டாம் இடத்தைப் பிடிக்கின்றன.

அம்மியே நகரும் ஆடிக் காற்றில் நாள்தோறும் கண்களில் தூசி விழுந்தவர்கள் பலரைப் பார்க்கிறோம். அது மட்டுமல்ல, விவசாயம் செய்யும் பொழுது கண்ணில் உமி, வைக்கோல் தூசி பட்டுவிட்டது, கரும்பலகை அழிக்கும் பொழுது கண்ணில் சாக்பீஸ் துகள் பட்டது, சமைக்கையில் கடுகு தெறித்து கண்ணில் விழுந்தது என்று பணியின் போது கண்ணை நோக்கிப் பாயும் தோட்டாக்கள் அதிகம்.

கண்ணின் உள் ஏதோ விழுந்துவிட்டதோ என்ற உணர்வு வரும் பொழுது முதலில் நம் எதிர்வினை என்னவாக இருக்கும்? கைகளைக் கொண்டு கண்களில் தேய்ப்பது. இது முற்றிலும் இயற்கையான ஒரு செயலே. இதற்குக் காரணம் கண்ணின் மேற்பரப்பிலும், இமைகளின் உட்பகுதியிலும் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் லட்சக்கணக்கான சிறு நரம்புகள் இருக்கின்றன. உடலின் பிற பகுதிகளை விட கண்களில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை அதிகம். தோலில் எறும்பு கடித்தால் உடனடியாக சொறிய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது போல், கண்களில் தூசி விழுந்தாலும் கைகளால் அதை அகற்ற முயல்வதும் இயல்பான எதிர்வினைதான்.

ஆனால் கைகளால் கண்ணைத் தேய்க்கும் போது அவை மேற்பரப்பில் ஒட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். 90% தூசிகள் மேல் இமையின் உட்புறத்தில் ஒட்டிக் கொள்கின்றன. அவை நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவதால் அந்த இடத்தில் இருக்கும் நரம்புகள் ‘ஓவர் டைம்’ பார்க்க வேண்டியதாகிறது. அதனால் உறுத்தலைத் தாங்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. கண்களைத் தேய்ப்பதாலும், தூசியை வெளியேற்றுவதற்கு கண்ணின் மேற்பரப்பில் உள்ள இரத்த நாளங்கள் செய்யும் வேலையாலும் அந்த இடத்தில் சிவப்பு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. கூடவே கைகளில் இருக்கும் அழுக்கு, துணியை பயன்படுத்தித் தேய்த்தால் அதில் இருக்கும் அழுக்கு இவை ஒட்டிக்கொண்டு அந்த இடத்தில் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

மேல் இமைகளுக்கு அடுத்ததாக, கருவிழியின் மேற்பரப்பு தூசிகள் ஒட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடமாக இருக்கின்றது. வெல்டிங் வேலை செய்யும் பொழுது பறந்து வந்து விழும் துகள்களுக்கு கருவிழி தான் மிகப் பிடித்த இடம். ராக்கெட் போல மிக வேகமாக பறந்து வந்து அந்த துகள் விழுவதால் அவை கருவிழியின் அடுக்குகளுக்கு நடுவில் போய் ஒட்டிக் கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் செய்யப்படும் பணியின் தன்மையைப் பொறுத்து துகள் பறக்கக் கூடிய வேகத்தின் அளவு மாறுபடும். சில சமயங்களில் கருவிழியைத் துளைத்துக் கொண்டு கண்களின் உட்பகுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தீபாவளி நேரம் பட்டாசைக் கொளுத்தி வைத்துவிட்டு, அது வெடிக்கத் தாமதமாகிவிட்டதே என்று அதன் அருகில் சென்று சிறுவர்கள் குனிந்து பார்க்க, அப்போது
பட்டாசு வெடித்து விடும் நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். இப்படியான சூழல்களில் கருவிழியைத் தாண்டி கண்ணின் உட்புற உறுப்புகளுக்குப் பல தூசிகள் சென்று உட்கார்ந்து கொண்டுவிடும்.

நேற்றைய தினம் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட கண்புரையை நீக்குவதற்காக ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சையை செய்தோம். அறுவை சிகிச்சையின் போது அவரது லென்ஸின் மேற்புறத்தில் கண்புரையைத் தவிர்த்து ஒரு வெள்ளை நிறப்புள்ளியைக் காண முடிந்தது. அதையும் புரை பாதித்த லென்ஸையும் கவனமாக அகற்றிவிட்டுப் பார்க்க, கருவிழியில் அதற்கு நேரான பகுதியில் மிக மெல்லிதான ஒரு புண் இருப்பதையும் பார்க்க முடிந்தது. துப்பாக்கிச் சூட்டின் பின்பாக உடம்பில் தங்கியிருக்கும் தோட்டாக்களை எடுத்துக் கொண்டால், அவற்றிற்கு இணையாக தோலில் நிச்சயமாக உள்நுழையும் ஒரு காயம் (entry wound) இருக்கும். அதைப் போல கண்களுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்படும் அயல் பொருட்களுக்கு இணையாகவும் ஒரு உள் நுழையும் காயத்தைத் தேடுவது அவசியம்.

மேலே குறிப்பிட்ட பெண்மணிக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னான பரிசோதனையின் போது கருவிழியில் இருந்த துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை முடிந்தபின் அவரிடம் எப்பொழுதாவது கண்களில் வேகமாக தூசி பறந்து விழுந்திருக்கிறதா என்று கேட்டோம். ‘‘இல்லையே!” என்றவர் சிறிது நேரயோசனைக்குப் பின், ‘‘என் கணவர் அம்மி கொத்தும் வேலை செய்கிறார், ஒரு முறை நான் எதேச்சையாக அருகில் சென்ற போது ஒரு துகள் பறந்து என் கண்ணில் விழுந்தது போல் இருந்தது. அதன்பின் எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அது இருக்கும் 20, 25 வருடத்திற்கு முன்பாக” என்றார். இப்போது அதனால் எதுவும் பாதிப்பா என்று அவர் வருத்தப்பட, ‘‘கண்புரை அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி கருவிழியில் மிகச்சிறிய தழும்பு ஒன்று மட்டும் இருக்கும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினோம்.

இன்னொரு நோயாளி. இவரை நான் சந்தித்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறுவயதில் கண்களில் பட்டாசு பட்டதால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவருக்குக் கண் புரை அறுவை சிகிச்சை செய்த பொழுது லென்ஸுக்குப் பின்புறம் நூற்றுக்கணக்கான சிறிய துகள்கள் இருந்தன. பட்டாசுத் தயாரிப்பில் கந்தகம் மற்றும் வேறு சில கனிமங்கள் கலந்திருப்பதால் அவை கண்களுக்கு உள்ளே சென்று அங்கு நீண்ட நாட்களாகத் தங்கி சில வேதியியல் எதிர்வினைகளை உருவாக்கியிருந்தன. மிகப் பொறுமையாக செயல்பட்டு முடிந்த அளவு அந்த அயல் பொருட்களை அகற்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பார்வை பெருமளவுக்கு மீண்டிருந்தது.

தூசி உள்ளிட்ட அயல் பொருட்களின் சிகிச்சையில் முதல் எதிரியே சுயமருத்துவம் தான். தூசி விழுந்தவுடன் தனக்குத்தானே எடுக்க முயல்வது, பிறர் மூலமாக முரட்டுத்‌ தனமாக அகற்றுவது.‌மருத்துவம் படிக்காத அரைகுறை நபர்கள் மூலமாக அகற்றுவது, இவற்றையே அனைவரும் முதலில் முயன்று பார்க்கின்றனர். சிலருக்கு இவை பலனளித்தாலும் பலருக்கு மோசமான விளைவுகளையே தரும். மேல் இமையில் இருக்கும் தூசிகளை மருத்துவர் அல்லது கண் மருத்துவ உதவியாளர் துணையின்றி அகற்றுவது கடினம். 90 சதவீத அயல் பொருட்களை அகற்றுவதற்கு நுண்ணோக்கி (slit lamp biomicroscope) தேவைப்படும். தூய்மையான பஞ்சு, உணர்ச்சி மரத்துப் போவதற்கான சொட்டுமருந்து இவையும் தேவைப்படும்.

எறும்பு, வண்டு உள்ளிட்ட உயிருள்ள அயல் பொருட்கள் வேறு விதமான எதிர்வினையை விளைவிக்கின்றன. அவற்றின் கொடுக்கில் இருக்கும் மிதமான அமிலகத்திற்கு எதிராக நம் உடல் எதிர்வினை ஆற்றுவதால், அதைச் சுற்றி ஒரு குகை போன்ற அமைப்பை உருவாக்கிவிடும். நுண்ணோக்கி மூலமாகப் பார்க்கும் பொழுது ஒரு கண்ணாடிப் பந்திற்குள் எறும்பு சிக்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றும். அந்தச் சூழலில் அதை அகற்றுவதற்கு அதற்கெனவே தயார் செய்யப்பட்ட மெல்லிய ஊசி அல்லது கருவிகள் தேவைப்படும்.

கண்களில் அயல் பொருட்கள் விழுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டியது அவசியம். பாதுகாப்புக் கண்ணாடி (goggles) அணிவதையும், நல்ல வெளிச்சத்தில் வேலை செய்வதையும் வலியுறுத்துவது முக்கியம். பாதுகாப்புக் கவசங்களை மீறியும் அயல் பொருட்கள் கண்களுக்குள் சென்று விட்டால் என்னென்ன முதலுதவிகள் கொடுக்க வேண்டும் என்பதற்கான கல்வியையும் வழங்கலாம். ஏற்கனவே கண்களில் தூசி விழுந்த அனுபவம் உள்ள நபர்களைக் கேட்டுப் பாருங்கள், மருத்துவ உதவியுடன் தூசி அகற்றப்பட்ட அடுத்த நொடி உலகையே வென்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதை உங்களுக்குச் சொல்லுவார்!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kanna ,Dinakaran ,
× RELATED டூர் போறீங்களா?